Featured Posts

  • Prev
  • Next

கை குலுக்குவோம்

Posted on : 27-08-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

கை குலுக்குவோம்

காற்றோடு மேகம்
கை குலுக்கும் போது தான்
மழையாகிறது
மண்ணோடு மழை
கை குலுக்கும் போது தான்
வளமாகிறது
வண்டோடு மலர்
கை குலுக்கும் போது தான்
கனியாகிறது
உளியோடு கல்
கை குலுக்கும் போது தான்
சிலையாகிறது
விரலோடு வீணை
கை குலுக்கும் போது தான்
இசையாகிறது
நாடோடு நாடு
கை குலுக்கும் போது தான்
நட்பாகிறது
கண்ணோடு கண்
கை குலுக்கும் போது தான்
உருவங்கள்
பரிமாறப் படுகிறது
உடலோடு உடல்
கை குலுக்கும் போது தான்
சந்ததியாகிறது
மலரோடு மலர்
கை குலுக்கும் போது தான்
மாலையாகிறது
சூட்டோடு சுடர்
கை குலுக்கும் போது தான்
சுவாலை ஆகிறது
மனிதனோடு மனிதன்
கை குலுக்கும் போது தான்
உறவு வலுவாகிறது

இயற்கை எல்லாம்
கை குலுக்கி மனிதனுக்கு
கற்று தருகிறது
கண்டவுடன் கைகுலுக்குவோம்
உறவை வலுபடுத்துவோம்
இதையெல்லாம்
பேப்பரோடு பேனா
பேசும் போது தான்

by ராஜா கமால்

Source : http://rajakamal.blogspot.com/2008/09/blog-post_20.html

புண்ணியம் தேடும் புனிதமாதம். رَمَضَانَ]

Posted on : 12-08-2010 | By : mohamedali | In : இஸ்லாம் (ISLAM), கவிதைகள் (POEM)

Tags:

0

அன்புடன் மலிக்கா

மாதம் புனித மாதம்- புதிதாய்
பிறக்கும் ஒவ்வொரு வருடம்

அறம் நல்லறம் கொண்டுவரும்
நோன்பு என்னும் புனித விரதம்

அருள்களை அள்ளி அள்ளி வழங்கப்படும் மாதம்
ஆண்டவனின் சன்னிதானம் அடைப்பெறும் மாதம்
திருக்குர்ஆன் அருளப்பட்ட புனிதமான மாதம்

சங்கைமிகு லைலத்துல் கத்ர் [ஆயிரம் மாதங்களைவிட
சிறந்த இரவு] வந்து இறங்கும் மாதம்
தீங்குசெய்யும் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் மாதம்

இறைவனிடம் கேட்டதும் கிடைக்கபடும் மாதம்
இறைச்செய்தி இறக்கப்பட்ட இன்பமான மாதம்
தக்வா என்னும் இறையச்சத்தின் பயிர்ச்சிக்கான மாதம்

சுவர்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம்
நரகத்தின் கதவுகள் மூடப்படும் மாதம்

விடிய விடிய வணக்கங்கள் செய்யப்படும் மாதம்
விடிந்தபின் விரதங்கள் போற்றப்படும் மாதம்

திக்ருகளும் தஸ்பீஹ்களும் ஓதப்படும் மாதம்
தீமைகளை விட்டுவிட்டு தவிர்ந்திருக்கும் மாதம்

நன்மைகளை செய்து நல்லருள் பெறும் மாதம்
நன்மை ஒன்றுக்கு பத்து என பெருக்கித்தரும் மாதம்

ஜக்காத் என்னும் கொடைகள் கொடுக்கப்படும் மாதம்
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு வாரிவழங்கும் மாதம்

மலையளவு தவறுகளும்- மனமுருகி
கேட்கும்போது மன்னித்தருளும் மாதம்

இறையச்சத்தால் செய்யப்படும் நன்மைக்கேற்ப
முன்செய்த பாவங்களும் மன்னிக்கப்படும் மாதம்.

நோன்பு இது நோன்பு –இதை
நோற்போருக்கு கிடைக்கும் மான்பு

யார் இவன்?…….

Posted on : 09-08-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

யார் இவன்?…….

வானம் தெளிவாக தெரியும்
நீரோடையில் முகம் பார்க்க
அதனூடே கண்ணாடி யை
நிறுவ எத்தனிக்கும் …இந்த எத்தன் யார்?
பளிங்கு மாளிகையில்
பளிச்சிடும் மின் விளக்குகளின்
மத்தியில் அற்பமாக எரியும்
மெழுகுவர்த்தி ….இந்த மெழுகன் யார் ?
புல்வெளி போர்வை போர்த்திருக்கும்
கோல்ப் மைதானத்தில் கால்பந்து
விளையாட ஆசைபடும் …..இந்த பேராசைக்காரன் யார் ?
திராட்சையைப் பறிக்க
கொடியன எண்ணி
வேப்பமரத்தில் ஏறி
ஏமாறும் …………..இந்த ஏமாளி யார் ?
சிப்பிக்குள் முத்தெடுக்க
கடலென நம்பி
மாடியிலுள்ள
தண்ணீர் தொட்டியில் தேடித்தேடி
களைத்த……..இந்த அசந்தவன் யார் ?
தோட்டத்தை செழிக்க
வைக்க கடல் நீரை
பாய்ச்சிய…….இந்த உறைந்துபோனவன் யார் ?
மழை நீரை ப் பார்க்க
குடையை தலைகீழ ப்
பிடித்து குடைக்குள் மழை
விட்ட ……………..இந்த தொடர்பில்லாதவன் யார் ?
சுற்றத்தையும்
நட்பையும்
அளவாவிட
பணம் கொடுக்கும் …. இந்த பாக்கியமற்றவன் யார் ?
தாமரை இலை தண்ணீராக
தடுமாறும் …..இந்த ஒட்டாதவன் யார் ?
மின்னிடும் நட்சத்திரங்கள் சூழாத ,
மேகங்கள் தழுவாத ,
அன்னியமாக உலா
வரும் வெற்று நிலா …..இந்த அந்நி(லா)யன் யார் ?
யார்தான் இவன் ?………………….
—-அப்துல் ரஹ்மான் —

harmy

http://adirainirubar.blogspot.com/2010/08/blog-post_9841.html

சூரியன் மூழ்கிய ஆகாயம்..by ஃபஹீமாஜஹான்

Posted on : 06-08-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

அந்தச் சூரியன்
மூழ்கிவிட்டது

கடல்தாண்டிப்போகவுமில்லை
அடவி வழியே பதுங்கிய படி
நீள்தூரம் கடக்கவுமில்லை

நீரில் மூழ்கியவாறு தீ கரையேறிய நாளில்
நிலத்தில் பதுங்கிக் கொண்டு புயல்
முற்றவெளிக்கு வந்த நாளில்
ஆகாயத்தின் அருகுகளினூடாகப் புறப்பட்ட இடியோசைகள்
தலைக்கு மேலாக மையம் கொண்ட நாளில்
சூரியன் உன்மத்தங்கொண்டு
அலையத் தொடங்கியது

சூரியன் உருவாக்கிய நகரங்கள்
அஞ்சிய படி சிதறியோடத்தொடங்கின
அது வளர்த்த பயிர் நிலங்கள்
கருகத் தொடங்கின
ஆகாயமெங்கும் தீப்பிடித்த பொழுதில்
சூரியனி்ன் பிரகாசம்
மெல்ல மெல்ல
வடியலாயிற்று

யாரும் சென்றடைய முடியாத ஏரியொன்றில்
கடைசியாக அது
மறைந்து கொண்டிருந்தது
நீர்ப்பரப்பில் உதிரத்தைக் கரைத்தபடி

சூரியன் செத்துப்போன நிலத்தை
ஊழியின் பெருமழை நனைத்தது
அது உருவாக்கிய பட்டினங்களில்
நிரந்தர இருள் படியலாயிற்று

நன்றி: மறுபாதி (இதழ் -4)

Posted by ஃபஹீமாஜஹான்

நன்றி:http://faheemapoems.blogspot.com/2010/08/blog-post.html

கூகுள் ரீங்காரம் Buzz

Posted on : 05-08-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

அன்புடன் புகாரி

கனவுகளைக் குவித்து
ஒரே இடத்தில்
பொட்டலம் கட்டித் தருகிறது
ரீங்காரம்

குழுமங்களின் சிறகுகள்
மெல்ல மெல்ல
முறிக்கப்படுகின்றன
ரீங்கார வண்டுகளின்
சின்னஞ்சிறு சிறகுகள்
லட்சம் பல லட்சமாய்
வெடித்துப் படபடக்கின்றன

கணினி இணையம்
விட்டகலா
தொட்டணைத்தூறும் மனக்கேணி
பொங்குகிறது அளவற்று
அகர முதல
இணைய வெளியெல்லாம்
கூகுள் பகவான் ஆனது.

http://anbudanbuhari.blogspot.com/2010/02/buzz.html

அன்புள்ள தமிழ்நாடே…

Posted on : 01-08-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

அன்புடன் மலிக்கா

இரண்டு வருடங்கள் கழித்து
இளைப்பாற வருகிறேன்
இனிப்பாய் இளநீர் தந்து
இன்பமுறச் செய்வாயென

தங்கத்தமிழ்நாடே உனைக்கான
தகதகக்கும் வெயிலை
துடச்சி எரிஞ்சிவிட்டு
தவிப்பாய் ஓடிவருகிறேன்

தாய் தங்கைகண்டு எனைத்
துரத்தி விளையாண்ட
தோழிகளைக் கண்டு
சுகத்தையும் சோகத்தையும்
பகிர்ந்துவிட்டு

மீண்டும்
பாலைவனம் வந்துசேரவேண்டும்
பட்டினியில்லா சோறுதிங்கவும்
பந்தங்கள் பாசமாய் எங்களோடு
ஒட்டி உறவாடவும்

மீண்டும்
ஓடிவரவேண்டும்
ஓயாது உழைக்கும் என்னவனுக்கு
ஒத்தாசையாக இருக்கவேண்டும்

ஆகையால்

அன்புள்ள தமிழ்நாடே-என்னை
ஆசையாய் வரவேற்று
அன்போடு உபசரித்து
இன்முகத்தோடு திரும்ப அனுப்பிவை

ஏனெனில் நான் என்றுமே
என் தாயகத்தின் திருமகளே….

நீரோடையில் நீந்த மீண்டும் 15 நாள் கழித்து வருவேன் அதுவரை மறந்துவிடாதீங்கப்பா நீங்க மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். மீண்டும் வருவேன் எழுத்தாய். வரியாய். கவிதையாய். கவிதைகள் அப்பப்ப வந்துகொண்டிருக்கும். கருத்துக்கள் எழுதாமல் போய்விடாதீர்கள். அனைத்துக்கும் திரும்பியதும் பதில் தருவேன்.

அதுவரை உங்களிடமிருந்து பிரியாவிடைபெறுவது

உங்கள்
அன்புடன் மலிக்கா

இறைவனைநேசி

Source : http://niroodai.blogspot.com/2010/07/blog-post_24.html


கவிதை கேளுங்கள்! by அந்நஜாத்

Posted on : 28-07-2010 | By : mohamedali | In : இஸ்லாம் (ISLAM), கவிதைகள் (POEM)

Tags:

0

M.S. கமாலுத்தீன், பெங்களூர்

கவிதையை மனிதன் நீண்ட நெடுங்காலமாகவே ரசித்து வருகிறான். மொழி, எழுத்து இலக்கணம்,இவை தோன்றிய காலத்திலிருந்தே மனிதனுக்கும் கவிதைக்கும் நெருங்கிய உறவுண்டு. கவிதைகள் மனித வாழ்வின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது; கவிஞர்களும் அப்படியே.

இவ்வுலகை ஆண்ட அரசர்கள் கவிதைக்கு மயங்கி தான் ஆண்ட நாட்டின் ஒரு பகுதியை அல்லது ஒரு ஊரை கவிஞர்களுக்குத் தானமாக கொடுத்திருக்கிறார்கள். அநேக அரசர்கள் மக்களின் வரிப் பணத்தை வாரி வழங்கி தங்களை வள்ளலாகக் காட்டிக் கொண்டார்கள். அப்டி என்னதான் கவிதையில் இருக்கிறது என்றால் ஒன்றுமே இல்லை என்பது தான் பதில். கவிதை என்பது ஒரு விஷயத்தை உவமைகளுடன் வார்த்தை ஜாலங்களுடன் சொல்வதுதான்.

கவிதையை  இஸ்லாம் வெறுக்கிறது; கவிஞர்களை இஸ்லாம் வழிகேடர்கள் என்ற சொல்கிறது; கவிதைக்கு இஸ்லாத்தில் இடமே இல்லை என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. கவிஞர்களைப் பற்றி அல்லாஹ் சொல்வதைப் பார்ப்போம்.

“இன்னும் கவிஞர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்களே பின்பற்றுகிறார்கள்” (அல்குர்ஆன் 26: 224) மேலும்பார்க்க 26:225, 226,36:69) யாரை அல்லாஹ் வழிகேடர்கள் என்று சொல்கிறான்? எப்படிப்பட்ட கவிதைகளை இஸ்லாம் அனுமதிக்ககிறது? மேலே உள்ளகுற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் ஹதீஸ் வெளிச்சத்தில் தெளிவுபெறுவோம்.

நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லிக்கொண்டிந்த ஆரம்பகாலத்திலும் சரி, இஸ்லாம் ஓரளவு வளர்ந்து மக்கள் அணி அணியாக இணைந்து கொண்டிருந்து போதும் சரி, குறைஷிகளின் கவிதை கலந்த குற்றசாட்டுக்கு, கவிதை மூலமே தங்கள் ஆஸ்தான கவிஞர்கள் மூலம் பதில் சொல்வார்கள்.” நபியின் கவிஞர்” என்ற பெயரும் அவர்களுக்கு இருந்தது. உதாரணமாக:

கஅப் இப்னுமாலிக்(ரழி) – போர்ப்பரணி பாடி எதிரிகளை அச்சுறுத்துவார்கள்.

ஹஸ்ஸான் இப்னுஸாபித்(ரழி) – எதிரிகளின் பாரம்பரியமான இலக்குகளைப் பழித்துப் பாடுவார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரழி) – நிராகரிப்பைச் சாடி கவிதை பாடுவார்கள்.

இதே போல் பெண்களிலும் கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்வது என்றால், ஸஃபிய்யாபின்த் அப்துல் முத்தலிப்(ரழி), கன்ஸா பின்த் அமர்(ரழி) இவர்களைச் சொல்லலாம்.

உண்மையை சொல்லக் கூடிய, மிகைப் படுத்தாத – வரம்புமீறாத கவிதைகளை இஸ்லாம் வரவேற்கவே செய்கிறது. வரம்பு மீறும் போது நபி(ஸல்) அவர்கள் திருத்தியதை இந்த ஹதீஸ் மூலம் அறியலாம்:

என் கணவருடன் உறவைத் துவக்கிய காலை நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். நீ இப்போது எனக்கு எவ்வளவு அருகில் அமர்ந்து இருக்கிறாயோ அவ்வளவு பக்கத்தில் அமர்ந்தார்கள். அப்போது எங்களின் சிறுமிகள் தஃப்கள் அடித்தனர்.பத்ருப் போரில் கொல்லப்பட்ட என் முன்னோர்களின் புகழைப் பாடலானார்கள். அப்போது ஒரு பெண்மணி “நாளை நடப்பதை அறியக்கூடிய நபி எங்களிடம் இருக்கிறார்” என்று கவிதை பாடினார்.அவரிடம் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு பாடுவதைவிட்டும் வாயை மூடு; இதற்க முன்பு பாடியதைப்பாடு எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ருபிய்  பின்து மு அவ்வித் (ரழி) நூல்: திர்மிதீ (ஹதீஸ் எண் 1096) இந்த புகாரீயில் சின்ன சின்ன மாற்றங்களுடன் இடம் பெற்று உள்ளது.

எதைப்பற்றி விமர்சிப்பதாக இருந்தாலும் அதைப்பற்றி ஞானம் வேண்டும். கவிதையைப்பற்றி விமர்சிக்க கவிதை ஞானம் வேண்டும் இருந்ததா? இந்த கேள்விக்கு அவர்களே பதில் சொல்கிறார்கள்.

“கவிதையிலும் ஞானம் உண்டு” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: இப்னு அப்பாஸ் (ரழி) அப்துல்லாஹ் (ரழி) நூல்: திர்மிதீ (ஹதீஸ் எண் 3001, 3002), அபூதாவூத் இப்னுமாஜ்ஜா.

கவிதையில் ஞானமுடைய நபி(ஸல்) அவர்களே பல சந்தர்பங்களில் வசன கவிதையில் பேசியதை ஹதீஸ்களில் காணமுடிகிறது.

ஒரு தடவை நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்தபொழுது ஒரு கல் அவர்களின் மீது வந்து விழந்தது. அதன் காரணமாக அவர்களின் விரல் இரத்தமயமாகி விட்டது. அப்போது அவர்கள் ” நீ இரத்த (வெள்ள)த்தில் மாறிவிட்ட விரலேயன்றி வேறுயாதுமில்லை. அன்றி அல்லாஹ்வுடைய வழியில் இந்த வேதனை உனக்குக்கிடைத்துள்ளது” என்று (இரண்டு வரிவசன) கவிதை பாடினார்கள்.

அறிவிப்பவர் : ஜுன்துப்இப்னு அப்துல்லாஹ்(ரழ)

நூல்கள் : புகாரீ, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் பாத்திமாவின இல்லத்திற்கு வந்தபோது அலீ(ரழி) யைக் காணவில்லை. “உன் பெரியதந்தையின் மகன் எங்கே? என்று பாத்திமாவிடம் கேட்டார்கள். எனக்கும் அவருக்கும் சிறிய மனஸ்தாபம் இருந்தது. என்னிடம் தங்கவில்லை” என்று பாத்திமா(ரழி) கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ” அவர் எங்கே என்று பார்த்துவாரும்!” என்று ஒருவரை அனுப்பினார்கள். அவர் திரும்பி வந்து “அலீ பள்ளி வாசலில் உறங்கிக் கொண்டிருக்கிறார்” என்று பதில் சொன்னார்.

நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தபோது அலீ(ரழி) தமது மேலாடை விலகியவராகவும் மேனியில் மண் படிந்தவராகவும் ஒரு பக்கமாகப் படுத்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரது மேனியில் படிந்திருந்த மண்ணைத் தட்டிவிட்டு ” மண்ணின் தந்தையே எழும்; மண்ணின் தந்தையே எழும்!!” என (வசன கவிதையில்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅது (ரழி),

நூல்: புகாரீ (ஹதீஸ் எண் 441)

நபி(ஸல்) அவர்களே பள்ளியில் மேடை அமைத்துக்  கொடுத்து கவிதை பாடசொன்ன சம்பவம் இதோ:

“நபி(ஸல்) அவர்கள் ஹஸ்ஸானுக்காக பள்ளியில் ஒரு மேடையை அமைப்பார்கள். அதன் மேல் ஹஸ்ஸான்(ரழி) நின்று நபி(ஸல்) அவர்களைப் புகழ்வார். அல்லது அவர்கள்மேல் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு அளிப்பார்” அல்லாஹ்வின் தூதரைப் புகழும்வரை அல்லது அல்லாஹ்வின் தூதர் சார்பில் மறுப்பளிக்கும் வரை ஹஸ்ஸானுக்கு அல்லாஹ் குஹுல்குதஸ் (ஜிப்ரயீல்) மூலம் பலப்படுத்து கிறான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி),

நூல்: திர்மிதீ (ஹதீஸ் எண் 3003, 3004)

நபி(ஸல்) அவர்கள் கவிதையை அனுமதித்ததற்கு காரணம் வார்த்தையில் இருக்கும் வலிமைதான். சுடு சொற்களை எதிரிகளின் மீது வீசும்போது வார்த்தைகள் வதைக்கும். வாழ்நாள் முழுவதும், தமிழில் கூட சொல்வார்கள் : தீயினால் சுட்டபுண் ஆறிவிடும், நாவினால் சுட்டபுண் ஆறுவதில்லை என்று . நபி(ஸல்) அவர்கள் உம்ரதுல்களாவை நிறைவேற்ற மக்கா சென்ற போது அவர்களின் முன்னே கஃபுபின் மாலிக் பின் வரும் கவிதையை பாடியபடி நடந்து சென்றார். காஃபிர்களின் மைந்தர்களே! இவரை (நபியை) இவரது பாதையில் விட்டு விடுங்கள்! மண்டை ஓட்டை அதன் இடத்திலிருந்து நீக்கும் வகையில் இவரது சட்டங்களினால் இன்று உங்களை தாக்குவோம்; அத்தாக்குதல் உற்ற நண்பனையும் மறக்கச் செய்து விடும். அப்போது உமர்(ரழி) அவர்கள் மாலிக்கின் மகனே! அல்லாஹ்வின் தூதர் முன்னிலையில் அல்லாஹ்வின் ஹரம் (புனிதபூமி) எல்லையில் ்கவிதை பாடுகிறீரா? என்று  கேட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் “உமரே! அவரைவிட்டு விடும்; அக்கவிதை அம்பை விட வேகமாக அவர்களைத் தாக்கும்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ்ு (ரழி),

நூல்: திர்மிதீ (ஹதீஸ் எண் 3005)

நபி(ஸல்) அவர்கள் பல சந்தர்பங்களில் கவிதைகளை மேற்கோள்காட்டி உள்ளார்கள். உதாரனத்துக்கு இரண்டு ஹதீஸ்களைப் பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்கள் கவிதைகளை மேற்கோள் காட்டுவார்கள்? என்று ஆயிஷா(ரழி)யிடம் கேட்டேன். அதற்கவர்கள் அப்துல்லாஹ் பின் ரவாஹாவின் கவிதையை மேற்கோள் காட்டுவார்கள்.” நீ யாருக்கு உணவளிக்கவில்லையோ அவன் உன்னிடம் செய்திகளைக் கொண்டு வருவான்” என்ற கவிதையை கூறுவார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி),

நூல்: திரிமிதீ (ஹதீஸ் எண் 3006)

“அல்லாஹ்வைத் தவிர அனைத்தும் அழிந்துவிடும்” என்ற லபீத் எனும் கவிஞரின் கூற்றே அரபியரின் பேச்சுக்களில் சிறந்ததாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி),

நூல்: புகாரீ, முஸ்லிம், திரிமிதீ (ஹதீஸ் எண் 3007)

தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை

Posted on : 16-07-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

வளைதலும்
வளைந்து கொடுத்தலுமான
நாணல்களின் துயர்களை
நதிகள் ஒருபோதும்
கண்டுகொள்வதில்லை

கூடு திரும்பும் ஆவல்
தன் காலூன்றிப் பறந்த
மலையளவு மிகைத்திருக்கிறது
நாடோடிப் பறவைக்கு

அது நதி நீரை நோக்கும் கணம்
காண நேரிடலாம்
நாணல்களின் துயரையும்

சிறகடித்து அவற்றைத் தடவிக்கொடுத்து
தான் கண்டுவந்த
இரயில்பாதையோர நாணல்களின் துயர்
இதைவிட அதிகமென
அது சொல்லும் ஆறுதல்களை
நாணல்களோடு நதியும் கேட்கும்
பின் வழமைபோலவே
சலசலத்தோடும்

எல்லாத்துயர்களையும்
சேகரித்த பறவை
தன் துயரிறக்கிவர
தொலைவானம் ஏகும்
அப்படியே தன் கூடிருந்த மரத்தினையும்
கண்டுவரக் கூடும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# மறுபாதி – கவிதைகளுக்கான காலாண்டிதழ் – 02
# சிக்கிமுக்கி இதழ் – 4 பெப்ரவரி, 2010
# உயிர்மை # நவீன விருட்சம்

http://mrishanshareef.blogspot.com/2010/05/blog-post_20.html

மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து

Posted on : 01-07-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

என்னிடம் கூறப்பட்டதைப்போலவே – அதிகாலையில்
மகனின் வாகனத்திலேறி அதிக தொலைவு பயணித்து
நகரமொன்றின் தெருவோர மரநிழலில் வாகனத்தை நிறுத்தியவேளை
மூச்சுத் திணறியபோதும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை நான்

நன்றாக நினைவுள்ளது இதே மரம்தான் மகனே
உன்னைத் தூக்கிக்கொண்டு பிரயாணக் களைப்பைப் போக்கவென
நின்றேனிங்கு முன்பொரு இரவில் – அதிசயம்தான்
மீண்டும் அந்த இடத்துக்கே எனை அழைத்து வந்திருப்பது

உனைப் பெற்றெடுத்த நாள்முதலாய்
இணையற்ற அன்பைப் பொழிந்தவளிடம்
போய்வருகிறேன் என்றேனும் பகராமல் நீ செல்கையில்
உள்ளம் பொங்கி வழிகிறது விழிகளினுடாக

கைக்குள் திணித்துச் சென்ற ஆயிரம் ரூபாய் நோட்டு பெரும் சுமையாகிட
உள்ளத்தின் உறுதியைக் கண்களில் திரட்டுகிறேன்
பதற்றமேதுமின்றி வாகனத்தை ஓட்டிக்கொண்டு
பத்திரமாக வீடுபோய்ச் சேர்ந்திடுவாய் என் மகனே

மூலம் – மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# சொல்வனம் இதழ் – 27
# உயிர்மை
# நவீன விருட்சம்


Posted by எம்.ரிஷான் ஷெரீப்

http://rishantranslations.blogspot.com/2010/07/blog-post.html

செம்மொழிப் பாடல் !!!

Posted on : 26-06-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

செம்மொழிப் பாடல் !!!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

செம்மொழியான – தமிழ் மொழியாம்!
செம்மொழியான – தமிழ் மொழியாம்!

செம்மொழியான – தமிழ் மொழியாம்!
செம்மொழியான – தமிழ் மொழியாம்!

எனதூருக்கு வருவாயா…?

Posted on : 23-06-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

by எம்.ரிஷான் ஷெரீப்


அன்புடன் சினேகிதனுக்கு …,
பனை மரங்களையும்
பவளப் பாறைகளையும்
பார்த்திடும் ஆவலில் நீ
எனதூர் வரப்போவதாக
மூன்று வாரங்களுக்கு
முன் அனுப்பிய
அஞ்சலட்டை
இன்றென் கரம் சேர்ந்தது !

என்ன செய்ய ?
உள்நாடு தானெனினும் – அதுவும்
பல சாவடிகளில் தரித்தே
வரவேண்டியிருக்கிறது !

யுத்தம் தின்று துப்பி
எச்சிலான எனதூரில்,
சமுத்திரம் உறிஞ்சிக் குடித்து,
வாந்தியெடுத்துயிர் பிழைத்த
மக்களுடன் முகாமினில்
எனது இருப்பு !

நண்பா ,
பனை மரங்களை விட
மீஸான் கட்டைகளே
தற்போது ‘
எனதூரெங்கும் நடப்பட்டுள்ளன.

அப்பா

Posted on : 21-06-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

பாஷா


Father and Childபடைப்பு புறக்கணிக்கும்
முதல் படைப்பாளியாய்…..
கோமாளி குல்லாய்களால்
கைகொட்டி அங்கீகரிக்கப்பட்டு
காசு தரும்
கைகாட்டி பொம்மையாய்……
இருண்ட பால்வெளியில்
உலகுக்கு ஒளியூட்ட
ஒற்றை நட்சத்திரமாய்,
தேவதூதனாய் தோன்றி – பின்
சாத்தனாக சபிக்கப்படும்
சாந்தமாய்……….
அப்பாவென்றொரு உறவு!

எதிர்த்துப் போராடுவதுமில்லை
எட்டி மிதிப்பதுமில்லை
இயலாமையின் இயல்பென
இமைமூடி அழும்
வெட்டிசாய்க்கப்படும் முதிர்மரமும்
வேர்வை வற்றிய அப்பாவும்!

நெஞ்சிலே கருவறைகொண்டு
பிரசவ நாள் மறுத்து
நாடியடங்கும் நொடியிலும்
நினைவை சுமந்து செல்லும்
அங்கீகரிக்கப்படாத தாய்மையது!

பாஷா

நன்றி: www.keetru.com

http://xn--clc0da2dh4e.com/index.php?option=com_content&view=article&id=6774:2010-04-24-10-19-04&catid=2:poems&Itemid=265

காலுடைந்த ஆட்டுக் குட்டியும் சிறுமியும்

Posted on : 09-06-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

Tags: , , , , , ,

0

Posted by ஃபஹீமாஜஹான்

நொந்து போன நாட்களைத் தனது
சின்னஞ்சிறு தோள்களில்
சுமந்தலைந்த சிறுமி
காலுடைந்த ஆட்டுக்குட்டியைக்
கீழிறக்கி வைத்துவிட்டு
மண்தெருவில் சிந்திக் கிடக்கும்
நெல் மணிகளைக்
குடிசைக்குள்
காவிச் சென்றிட நினைக்கிறாள்

முன்பெனில்
வயல் வரப்பொன்றில் குந்தியிருந்து
அவளது பிஞ்சுக் குரலெட்டாத்
தொலைவு வரை திரிந்து
உதிரி நெற்கதிர் பொறுக்கி வரும்
அம்மாவுக்காகக் காத்திருப்பாள்.
அம்மா திரும்பி வரும் வேளை
ஒரு முயல் குட்டியை
ஒரு செம்மறியாட்டு மந்தையை
ஒரு அபூர்வப் பறவையை
விழிகளால் துரத்தியவாறு
மாபெரிய வானத்தில் முகில் கூட்டங்களிடையே
அலைந்து கொண்டிருப்பாள்
அல்லது
நாரைக் கூட்டங்களுக்குக்
கையசைத்து விடைகொடுத்தவாறு
அவை சென்று மறையும்
மலைத்தொடர்களின் மறுபுறத்தே
என்ன இருக்குமென்ற
புதிரொன்றால் அலைக்கழிவாள்

காணாமல்போனது

Posted on : 19-05-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

by: அன்புடன் மலிக்கா

கார்மேகங்கள் என கருப்பாய் கறுங்கூந்தல்
முட்டுக்கால்களை தொட்டது அன்று

கழுத்துக்கீழ் காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது
நாகரீகத்தின்  கத்தரிக்கோலுக்கு இரையாகி இன்று

இவர்கள் காசுகொடுத்து கத்தறிக்கிறார்கள் மாடலுக்கு
அதுகூடை கூடையாய் விலைபோகிறது வெளிநாட்டிற்கு

பளபளக்கும் பட்டும் தளைய
தளையப்பின்னலும்தான் தமிழ்நாட்டின் திருஉருவம்
பாப்கட்டும் பேண்ட்சர்ட்டும் வெளிநாட்டவரின் மறுஉருவம்

ஆண்கள் அனைத்திலும் முழுமை என்று -
தற்போதுமுடியும் வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்-ஆனால்
பெண்களின் ஆடை குறைவதுபோலவே
குறைந்துகொண்டே போகிறது அழகிய கூந்தலும்
நாகரீகம்  மேலோங்கி கறுத்த கூந்தலெல்லாம்
வெளுத்தும் பழுத்தும் பல நிறங்களாகி விட்டது
அடிபெண்ணே அந்திவானம் சிவக்கலாம்
ஆனால் உன்கூந்தல் கறுத்தால்தான் அழகு

உன் அழகிய கூந்தல் அலை அலையாய்
தவழ்ந்து மிதப்பதில்தான் அழகு

அழகுமேனிக்கு  சிகைஅலங்காரம்
செய்வதுதவறில்லை அழகே -அதற்காக
சிகையையே அலங்கோலம் செய்துவிடாதே பெண்ணே..

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்

நன்றி :http://niroodai.blogspot.com/2009/10/blog-post_26.html

துபாயில் நான்…

Posted on : 03-05-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

துபாயில் நான்…

இருப்பை எல்லம் விட்டுவிட்டு
விருப்பை மட்டும் மூட்டை கட்டி
மறுப்பை சொல்ல வழியில்லாமல்
பொறுப்பை ஏற்று புறப்பட்டேன் நான்ஸ

அன்னை மண்ணில்
வேரறுபட்டதும்,

அன்னிய மண்ணில்- நான்
வேர்ப்பட்டதும்,
விமானம் ஏற‌
தீர்மானம் செய்ததால்ஸ

அன்று அரும்பாக இருக்கையிலே
ஆகாய பார்வையிலே
அலைபாய்ந்த ஆசையிலே
அழகாக தோன்றிய‌
ஆகாய ஊர்தியும்,

அரங்கேறி போகையிலே
ஆனந்த்தம் இல்லாத‌
அனுபவம் ஆனது.

அதில் அலங்காரம் செய்துதான்
ஆகாரம் வந்தது,
ஆசைபட்டு தீர்த்திடாமல்
அசை போட்டு தீர்த்துவிட்டேன்ஸ

இறங்கும் நேரம் வந்து விட‍- அன்று
இருக்கை இருந்து பார்த்தபோது- இங்கு
இயற்கை என்று ஒன்றும் இல்லைஸ

மணல் நகரின் அனல் காட்சி
இங்கு மக்கள் அல்ல மன்னர் ஆட்சிஸ

அன்று நிவார‌ண‌ம் தேடி வந்த‌ ந‌க‌ர‌ம்
இன்று நிரந்த‌ர‌ம் ஆகிப்போன‌ ந‌க‌ர‌ம்,

நாள் ‍ விடிந்தாலும் முடிந்தாலும்
ஒரே போல‌ இருக்கும்,

அட‌ அறைக்குள்ளே சிறைவைத்தால்
வேறென்ன‌ இருக்கும்ஸ

உற‌வோடு உற‌வாட‌
தொலைபேசி என‌க்கு,
அதில் போன‌ காசுக்கு
இங்கேது க‌ண‌க்குஸ

இங்கே ம‌னைவியோடு உற‌வாடி
பிள்ளை பெற‌முடியாம‌ல்,
“பில்லை” பெற்ற‌வ‌ர் ஆயிர‌ம்ஸ

இள‌மையும் வேலைக்கு
இரையாகி போச்சு,
கால‌மும் காசுக்கு
க‌ரியாகி போச்சு,
த‌லையெல்லாம் அத‌ற்குள்ளே
ந‌ரையாகி போச்சு,

காசாவ‌து மீந்த‌தா
செல‌வாகி போச்சுஸ
வ‌ருமான‌ம் வ‌ருமுன்னே
செல‌வு வ‌ந்து சேர்ந்திடும்,

வெறுமாக‌ ஊர் சென்றால்
உற‌வு வ‌ந்து சேருமா?

காசுக் க‌ண‌க்குக‌ள்
க‌வ‌லை த‌ருகிற‌து,
க‌ட‌ந்த‌ கால‌ம்தான்
க‌ண்ணில் வ‌ருகிற‌துஸ
இனி இஷ்ட்ட‌ப்ப‌ட்டாலும்,
க‌ஷ்ட்ட‌ப்ப‌ட்டாலும்,
ந‌ஷ்ட்ட‌ப்ப‌ட்ட‌து திரும்பாதுஸ

எந்நாடு சென்றாலும்
என் நாடு ஆகாது,

–BUHARI–(5z)

From : Faizur Hadi

அதே நிலா

Posted on : 24-04-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

அன்புடன் புகாரி

மூன்றாம் பிறையும்
அமாவாசையும்
நிலவிடமில்லை
நிற்கும் இடத்திலிருந்து
நோக்கும் நிலையில்தான்

பார்வைகளும் கோணங்களும்
முட்டிக்கொள்ளும்போது
எங்கோ தொலைதூரத்தில்
தேம்பி அழுகிறது
உண்மை

நிஜம்
வெளிவராமலேயே
புதைக்கப்படுவதும்
சுகமாகப் பிரசவிக்கப்படுவதும்
ஆழ்ந்த அனுபவத்திடமும்
நம்பிக்கையிடமும் உள்ளது

வாதிடுவதற்காகப்
பேசத் தொடங்கினால்
எதுவும்
பேசப்படப் போவதே இல்லை

பேசுவதற்கே
வாதிடக் கூடிய நிலை
அதனினும் அவலம்

எவ்வழியே யாதறியினும்
முடிவிலா
ஞான அலசலுக்குள்ளாக்குவதே
தெளிந்த நல்லறிவு

Label:

நன்றி :http://anbudanbuhari.blogspot.com/

கோடை

Posted on : 23-04-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

பெரு வனத்தை எரிக்குமொரு
ஊழித் தீயின் கனல் நான்
எரித்து எரித்துக் கருக்கி
எரியாக் கணங்களில் உள்ளுக்குள்
புகைந்து வெளிக் கசிந்து இருளாக்கி
பின்னும் ஆகாயத்தையே எரிக்கப்போல
அதியுயர் விருட்சங்களின்
நுனி பற்றியெரித்து
இன்னும் காட்டைக் கூடெனக் கொண்ட
எல்லா உயிரையும் பொசுக்கும்
வல்லமை பெற்ற கட்டற்ற நெருப்பின்
வலுஞ்சுடர்கள் நான்
மண்ணின் அடியாழத்துக்குள்
முகம் புதைத்துக் கொண்டோரே
நீர் மட்டும்
எல்லா அனல்களினின்றும்
தப்பித்து விட்டீரா

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி http://mrishanshareef.blogspot.com

கோடை

பெண்ணே நீயும்

Posted on : 30-03-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

by: அன்புடன் மலிக்கா

அடி ஞானப்பெண்ணே!

பெண்ணுக்கு
பெண்ணே எதிரி
இதைப் பார்க்கும்போது
கதறுது மனம்
பதறி

வயிற்றில்
சுமையில்லையென
வஞ்சிமனதில் வருத்தத்தை
சுமத்துவதா

வம்சம்
விருத்தியாகவில்லையென
வாழவந்தவளை
வதை செய்வதா

பெண்ணுக்கு
குழந்தையில்லையெனில்
மலடி என்றபெயர்
ஆணுக்கு
குழந்தையில்லையெனில்
??????? பெயர்

மருமகளுக்கு
குழந்தையில்லையெனில்
மகனுக்கு மறுமணம்

மகனுக்கு
குழந்தையில்லையெனில்
அது அவள்
வாங்கிவந்த வரமா

பெண்ணுக்கு
பெண்ணே சமமாகாமல்
ஆணுக்கு பெண்
ஆகுமா சரி சமம்

கூடிக்கூடி
குடும்பம் நடத்தியும்
குதூகலமாய்
தாம்பத்தியம் நடத்தியும்
இறைவன்
கொடுக்க நினைத்தால்தான்
குழந்தை

எல்லாம்
புரிந்திருந்தும் புரியாமல்
நடப்பவர்களைக்கண்டு
புண்படுகிறது
மனது

பெண்களே பெண்களுக்கு
ஆதரவாய் இருந்தால்
பெண்ணுலகமே
பொன்னாய் மின்னிடும்

அதனோடு ஆணினமும்
சேர்ந்திணைந்தால்
இப்பூலோகமே
பூத்துக்குலுங்கிடும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

நன்றி :http://niroodai.blogspot.com பெண்ணே நீயும்

வசந்த உதயம்

Posted on : 30-03-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

by ஃபஹீமாஜஹான்

தென்றல் வீச மறந்த கணப் பொழுதில்,

களப்பில் எப்போதேனும் அலையெழும்.
வேதனைமிகுந்த மீனொன்று மேலெழுந்து
நெஞ்சில் அடித்தழுது
தடதடவென்று செட்டைகளை அசைத்து
வாலால் நடந்தபடி தன் துயரத்தைச் சத்தமிட்டரற்றி
நீரில் வீழ்ந்து மறைந்து போகும் – அதுவும்
உறுதியான கணமொன்றில் மாத்திரமே.

தூரக் கரைதனில் நெளியும் எல்லா ஒளிப் புள்ளிகளும்
களப்பு நீரில் நீண்ட தம் வெளிச்ச ரேகைகளை வரையும்.

கல்லடிப்பாலம்
அரண் போல உயர்ந்து எழுந்தாலும்
தன் தலை கவிழ்ந்து விழி புதைத்து
புன்னகைக்க மறந்து துயர் தாங்கும்
ஓர் அப்பாவைப் போல.

சிந்தனை மறந்த வாகனங்கள்
பாலத்தை அவசரமாய்க் கடந்து செல்லும்
அர்த்தமற்ற தம் வெளிச்சங்களை
களப்பின் மீது நீண்ட கோடுகளாய்த் தீட்டி

இந்தக் களப்பு அம்மாவைப் போன்றது.
ஆழ்ந்த விழிகளால் மெளனித்து
அனைத்துத் துயரத்தையும் தாங்கும்
முகத்தில் அலையெழுப்பும் தென்றலுக்குப் புன்னகைக்கும்
எல்லா ஒளிக்கோடுகளையும் கலக்கும் இணைக்கும்
களப்பின் மார்பு அலைகளையும் சுழிகளையும் உயிர்ப்பிக்கும்.

புத்தரின் நினைவெழும் நிக்கினி போயாகூட – வெறும்
சுண்ணாம்பாய்க் களப்பினுள் கரைகிறது,
புத்தபிரான் சொர்க்கம் நுழைந்த பினர பௌர்ணமியும் – கடும்
இருளாயே இங்கு விடிகிறது.
வசந்தம் உதயமானாலும் உதிக்க மறுக்கிறது சூரியன்
இது கிழக்கு!

மூலம் : மஞ்சுள வெடிவர்தன
தமிழில் – ஃபஹீமாஜஹான்

நன்றி: இருக்கிறம் 50 வது இதழ்

Posted by ஃபஹீமாஜஹான்

நன்றி:http://rishantranslations.blogspot.com/

பச்சோந்தி

Posted on : 27-03-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

by ஃபஹீமாஜஹான்

சின்னஞ்சிறு செடியெனச்
சிற்றிலைகள் அசைந்தாடிக் கொண்டிருந்த
செல்லப் பெண்ணின் வாழ்வில்
பதுங்கிப் பதுங்கி உள்நுழைந்தாய்

அவளது பசுமையின் நிறமெடுத்து
அவளுக்குள் ஒன்றித்து
மோனத்தவமிருப்பதாய்
பாசாங்கு செய்தாய்
முழு உலகும் அவளேயென்று
தலையாட்டித் தலையாட்டி வசப்படுத்தினாய்

பின்வந்த நாட்களில்
எழுந்த சிறு சலசலப்பில்
அழகு காட்டி அசைந்தவாறு
உன் காலைச் சுற்றிவந்த
நச்சுக் கொடியொன்றினுள் நீ தாவினாய்
அந்தக் கொடியின் நிறமெடுத்து
மோகித்து முயங்கிக் கிடக்க
நீண்ட பொழுது தேவைப்படவில்லை உனக்கு
உண்டு சுகித்துக் கிடந்து
ஆதியில் தொடங்கிய அதே அரிப்பெடுக்கவே
இன்னுமொரு பெரு மரத்திற்குத் தாவினாய்

இன்று
வெடிப்புக் கண்ட
பெருவிருட்சத்தின் பட்டைகளையே
கோட்டை அரண்களென எண்ணியவாறு
உதிரத் தயாராயிருக்கும்
மரப்பட்டையின் நிறமெடுத்துக்
குந்திக் கிடக்கிறாய்
அற்பப் பதர் உனக்குத்தான்
எத்தகு பவிசுகள்

அழுகிய கனிகள் சொரியும்
பட்சிகளெதும் நாடாத அம் மரத்தை
வட்டமிட்டுப் பறக்கும்
கழுகொன்றின் கூர்ந்த விழிகளில்
உனது தலைவிதியை நான் படிக்கிறேன்
மிகச் சரியான தருணத்தில்
பதறித் துடி துடித்திடக்
கால் நகங்களில் காவிப் பறக்கும்
உனக்கான இறைவனின் தீர்ப்பு

2009.12.07
(நன்றி:கல்குதிரை)

Posted by ஃபஹீமாஜஹான்

நன்றி:http://faheemapoems.blogspot.com/2010/03/blog-post_22.html