கோவை, சூன் 24 – கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்குத் தலைமை வகித்து முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது “தொன்மையிலும் தனித்தன்மையிலும் முதன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழ் உலக மொழி மட்டுமல்ல – உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
முதல்வர் கலைஞர் அவர்களின் தொடக்க விழாத் தலைமையுரை வருமாறு:
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினைத் தொடங்கி வைத்து, “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி விருது” வழங்கி, விழாப் பேருரையாற்ற வருகை தந்திருக்கும் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி. பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்களே!
தடைக் கற்கள் பல போடப்பட்டாலும், அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு தமிழகத்தின் மீதும் – தமிழ்நாட்டு மக்கள் மீதும் கொண்டுள்ள அன்பின் காரணமாகவும் – பற்றின் காரணமாகவும் வருகை தந்துள்ள தங்களுக்கு உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களின் சார்பாக நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பு மலரை வெளியிட்டு, வாழ்த்துரை வழங்க வருகை தந்திருக்கும் மேதகு தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களே!
தமிழக அரசின் நிதியமைச்சர் இனமானப் பேராசிரியர், தமிழகத்தின் துணை முதலமைச்சர் தம்பி மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களே!
உலகில் பல்வேறு நாடுகளிலிருந்தும் இங்கே வருகைதந்திருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களே, ஆய்வறிஞர்களே, கவிஞர்களே, தமிழ் ஆர்வலர்களே, தமிழ் அன்பர்களே! என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!
கோவையில் நடைபெறுகின்ற இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு, மடை திறந்த வெள்ளமெனத் திரண்டு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது நன்றி கலந்த வணக்கத்தையும், உள்ளம் நிறைந்த வரவேற்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி தீரத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சைத் தரணியிலே; கருக்கலிலே கண் விழிக்கும் திருக்குவளை என்னும் சிற்றூரில், கவிபுனையும் கற்பனைத் திறனும், தமிழிசை ஆற்றலும், வேளாண்மை நாட்டமும் மிகுந்த முத்துவேலருக்கும் அஞ்சகத்தம்மையாருக்கும் மகனாய்ப் பிறந்து,
14 வயதினிலே – “வீரத்தமிழ் கொஞ்சும் நாட்டிலே” எனும் அணி வகுப்புப் பாடல் இயற்றி, தமிழ் வாழ்க, தமிழர் வெல்க என்று புலி, வில், கயல் பொறித்த கொடி பிடித்து, தமிழ் மாணவர் பட்டாளத்திற்குத் தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுடன் பேரணி நடத்தி;
அதே வயதில், “திராவிடர் விழித்துக் கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது. பெரும்பாலான திராவிடர் வீறுகொண்டெழுந்து விட்டனர். நாட்டைக் காப்பாற்றவும், கலை நாகரிகத்தைக் காக்கவும் கச்சை கட்டிவிட்டனர்” என்ற முன்னுரையோடு, ‘செல்வச்சந்திரா’ என்ற நாடகத்தை எழுதி;
17 வயதில் ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற ஓர் அமைப்பினைத் தோற்றுவித்து; அதன் ஆண்டு விழாவுக்கென, “கிளம்பிற்றுக் காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்! கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக் கூட்டத்தை!” என்ற பாடல் வரிகளைப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடமிருந்து வாழ்த்தாகப் பெற்று;
‘திராவிட நாடு’ தொடக்க இதழ் ஒன்றில், ‘இளமைப் பலி’ என்ற கட்டுரை எழுதி, அறிஞர் அண்ணா அவர்களின் கவனத்தைக் கவர்ந்து;
20 வயதில் ‘சேரன்’ என்ற புனை பெயரோடு, ‘முரசொலி’ இதழைத் தொடங்கி, “கிழவன் கனவு” எனும் சீர்திருத்த சிறுகதையினை வழங்கி; அன்னைத் தமிழுக்கு இயன்ற வழியனைத்தும் அணிகலன்கள் பல சூட்டியிருக்கிறேன்.
பின்னர், தந்தை பெரியார் அவர்களின் அரவணைப்பிலும், அறிஞர் அண்ணா அவர்களின் அன்பிலும் நனைந்து, வளர்ந்து; தமிழையே தோன்றாத் துணையாகவும், தோளேந்திய ஆயுதமாகவும் கொண்டு – கதை, கவிதை, கட்டுரை, நாடகம், திரைப்படம், அரசியல் எனப் பல்வேறு துறைகளிலும் பணி புரிந்து – ஆட்சியில் இருக்கும்போதும், இல்லாத போதும், தமிழ் அன்னைக்கு இயன்ற வழியனைத்தும், முனைந்து இடையறாது பணியாற்றி, அணி மணிகள் பலவும் தேடிக் கொணர்ந்து சூட்டிவரும் எனக்கு;
கோலமிகு கோவை மாநகரிலே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கும், அதன் தொடக்க விழாவிலே தலைமையேற்பதற்கும் கிட்டிய வாய்ப்பினைப் பெருமையாகக் கருதுகிறேன்.
இதுவரை உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில் எட்டு மாநாடுகள் நடைபெற்றிருக்கினறன. முன்னர், நடந்த எட்டு மாநாடுகளுக்கும், இப்பொழுது நடைபெறுகிற இந்த மாநாட்டுக்கும் வேறுபாடு உண்டு. முன்னர் நடந்தவை “உலத் தமிழ் மாநாடுகள்” இப்பொழுது நடைபெறுவது “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு”.
“உலகத் தமிழ்ச் செம்மொழி” என்பதில் உள்ள மூனறு சொற்களும் பொருள் பொதிந்தவை மட்டுமல்ல; பொருத்தமானவையும் ஆகும். தமிழ் உலக மொழி மட்டுமல்ல; உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், ஞானமுதல் மொழி தமிழே என்று நிறுவிக்காட்டியிருக்கிறார்.