உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண், பெண்)களுக்குதிருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன். (அல்குர்ஆன் 24:32)
இந்த வசனத்தில் இறைவன் ‘திருமணம் செய்து வையுங்கள்’ என்ற ஏவலை பயன்படுத்தியுள்ளதிலிருந்து தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பு பெற்றோர்களை சார்ந்தது என்பது விளங்குகிறது. குழந்தைகளை நல்லவிதமாக வளர்ப்பதும் அவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் துணைகளை அமைத்துக் கொடுப்பதும் நல்லப் பெற்றோர்களின் அடையாளமாகும். திருமண வயதை அடைந்து விட்டப் பிறகும் ஏழ்மையைக் காரணம் காட்டி திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டாம் எனற வழிகாட்டலும் இங்கு கிடைத்துள்ளது.
திருமணம் எனது வழிமுறை ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல என்பது நபிமொழி (அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : புகாரி)
பெற்றோர்களுக்கு,
மார்க்கத்திலும், குணத்திலும் (சிறந்த) நீங்கள் விரும்பும் மனிதர் உங்களிடம் (மணப்பெண் கேட்டு) வந்தால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், பூமியில் கடுமையான குழப்பமும், ஒழுக்கமின்மையும், அமைதியின்மையும் ஏற்படும்.அபூஹூரைரா (ரலி), திர்மிதி
இந்த ஹதீஸை பெற்றோர்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான திருமணங்களில் மணமகனின் ஒருக்கத்தைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல் குடும்ப உறவு – குடும்ப பாரம்பரியம் – சொத்து போன்ற இரண்டாம்பட்ச தகுதிகள் முன்னிலைப்படுத்தப்பட்டு திருமணம் முடிக்கப்படுகிறது. ஒழுக்கமற்ற பையனால் பெண்ணின் வாழ்க்ககை சீரழிந்து விட்டால் என்ன செய்வது என்றக் கவலையெல்லாம் ஏற்படுவதேயில்லை. பையனின் ஒழுங்கீனங்களைப் பற்றி யாராவது சுட்டிக் காட்டினால் கூட ‘எல்லாம் கல்யாணத்திற்கு பிறகு சரியாகிவிடும்’ என்ற பதிலே பெண்ணைப் பெற்றோர்களால் (குறிப்பாக பெண்களால்) முன்வைக்கப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு அவன் திருந்தா விட்டால் பெண்ணின் நிலை என்னாவது? என்ற கேள்வியெல்லாம் இங்கு எழுவதேயில்லை.
அதே சமயம், மார்க்க அறிவும், சிறந்த குணமும் கொண்ட ஒருவன் அவனாக முன் வந்து உங்கள் பெண்ணைக் கட்டிக் கொள்கிறேன் என்று கேட்டால் ஏதோ தவறு நடந்து விட்டது போன்று அங்கு பிரச்சனைகள் வெடிக்கும். இதை இன்றைய நடைமுறையில் கண்டு வருகிறோம். ஆனால் மேற்கண்ட நபிமொழி ‘நல்லொழுக்கம் உள்ளவர் பெண் கேட்டால் கொடுங்கள்’ என்ற அறிவுரையை முன் மொழிகிறது.
மணமகனுக்கு,
எந்தப் பெண் கிடைத்தாலும் கட்டிக் கொள்ளலாம் என்ற இலக்கற்ற நிலையில் திருமணத்திற்கு தயாராகி விடாதீர்கள். உங்களுக்கு வாழ்க்த்துணையாக வருபவள் உங்களில் பாதியாக வாழப்போகிறவள் என்பதை கவனத்தில் வையுங்கள். திருமணத்திற்கு முன் மனைவியாக வருபவள் யார்? என்பதை கவனியுங்கள்.
அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. (அல் குர்ஆன் 2:188)
கணவன் – மனைவியின் உறவை இதைவிட ரத்தினசுருக்கமாகவும், அழகாகவும், அழுத்தமாகவும் வேறு யாரும் சொல்லவே முடியாது என்ற அளவிற்கு இறைவன் ‘நீங்கள் அவர்களுக்கும் அவர்கள் உங்களுக்குமாக நீங்கள் ஒருவருக்கொருவர் ஆடையாவீர்கள்’ என்று விளக்குகிறான். நம் உடம்புடன் ஒட்டி உறவாடும் உடையை தேர்ந்தெடுப்பதற்கு நாம் எவ்வளவு கவனம் செலுத்துகின்றோமோ அதை விட கூடுதல் கவனம், வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் போது இருக்க வேண்டும்.
அந்த வகையில் வாழ்க்கைத் துணையாக வருபவள் யாராக இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் விளக்குகிறது.
ஒரு பெண் அவளது அழகு, செல்வச்செழிப்பு, குடும்ப கௌரவம், மார்க்கப்பற்று என்ற நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக! என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அபூஹூரைரா, அபூஸயீத் அல்-குத்ரி, ஜாபிர் போன்ற நபித்தோழர்கள், புகாரி, முஸலிம், அபூதாவுத், தாரமி, நஸயீ, இப்னுமாஜா
மனதிற்கு பிடித்த உடை உடலுக்கு சுகமளிப்பது போன்று மார்க்கப் பற்றுள்ளப் பெண் வாழ்க்கைக்கு சுமகளிப்பாள்.மார்க்கப் பற்று என்றவுடன் எல்லா வகையிலும் நூறு சதவிகிதம் மார்க்கப்பற்று உள்ளவளாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிடக் கூடாது. முதலாவதாக ஷிர்க் எனும் கொடிய இணைவைத்தல் என்ற மாபாவத்திலிருந்து அவள் விடுபட்டிருக்க வேண்டும்.
இணை வைக்கும் பெண்களை அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும், அவளைவிட இறை நம்பிக்கையுடைய ஓர் அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள். (அல் குர்ஆன் 2:221)
அழகு – அந்தஸ்து என்று அனைத்தும் இருந்தும் ஓரிறைக் கொள்கையே வாழ்க்கை என்ற உறுதிப்பாடு மட்டும் இல்லாமல் போய் விட்டால் முஸ்லிமான ஒரு ஆண்மகனுக்கு துணையாக வர அவள் தகுதியற்றவள் என்று இறைவன் பகிரங்கமாகவே கூறியுள்ளதால் முஸ்லிமல்லாத பெண்களிலிருந்து முஸ்லிம் என்ற பெயர் வைத்துக் கொண்டு இறை நம்பிக்கையில் கலப்படம் செய்து தர்கா போன்ற வழிபாடுகளை நடத்தும் பெண்கள் உட்பட இந்த வகையில் அடங்கி விடுவார்கள். அத்தகையப் பெண்களை புறந்தள்ளி வைக்கத்தான் வேண்டும்.
அன்பு செலுத்தும்; அதிகக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களை மணம் முடித்துக் கொள்ளுங்கள். உலக மக்களுக்கு மத்தியில் (நீங்கள் அதிகமாக இருப்பது கண்டு) நான் மகிழ்வேன் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மஃகலு பின் யஸார் (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி), அபூதாவூத், நஸயீ, முஸ்னத் அஹ்மத்.
இவ்வுலகம் இன்பகரமானது, உலக இன்பங்களில் மிகவும் சிறப்பானது நல்ல மனைவியை அடைவதாகும் என்பது நபிமொழி. முஸ்லிம்
மணமக்கள் திருமணத்திற்கு முன் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுங்கள்.
நான் ஒரு பெண்ணை மணமுடித்துக்கொள்ள பேசியிருந்தேன். இதனை அறிந்த இறைத்தூதர் (ஸல்), நீர் அப்பெண்ணைப் பார்த்துக் கொள்ளும், ஏனெனில் அது உங்களிருவருக்கிடையில் உவப்பையும், நட்பையும், இணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என் அறிவுரைப்பகன்றார்கள். நஸயீ, திர்மிதி, முஸ்னத் அஹ்மத்
இந்த சமுதாயத்தில் மூடத்தனமாக நீடித்து வரும் ஒரு கேவலத்தை இந்த ஹதீஸ் மறுக்கிறது. திருமண பேச்சு ஒரு குடும்பத்தில் துவங்கி தன் மகனுக்கு பெண் பார்க்க பெற்றோர்கள் துவங்கி விட்டால் பெற்றோர்கள் – குடும்பத்தார் உடன் பிறந்தவர்கள் (சில இடங்களில் மாமன் – மச்சான்கள் உட்பட) அந்தப் பெண்ணைப் பார்த்து விடுவார்கள். மாப்பிள்ளை மட்டும் திருமணம் முடிந்தப் பிறகே அந்தப் பெண்ணைப் பார்ப்பான். அவளும் கூட அப்படித்தான். இந்த எதிர்மறையான கலாச்சாரம் எங்கிருந்துதான் இந்த சமுதாயத்தில் புகுந்தது என்றுத் தெரியவில்லை. பிற அனைத்து சமூகங்களிலும் திருமணத்திற்கு முன் மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள். பிடித்திருக்கா இல்லையா என்பதை முடிவு செய்கிறார்கள். ஆனால் இங்கு நேர்மாற்றமாக நடக்கிறது. இதற்கு இஸ்லாமிய முத்திரை வேறு குத்தப்படுகிறது. தனக்கு வரப்போகும் துணைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அதை நேரில் பார்ப்பதன் மூலமே உறுதிப்படுத்த முடியும். இதற்கு தடைப்போடுவது எந்த வகையிலும் நியாயமில்லை.
நபி(ஸல்) அவர்களின் செய்தியில் நபி(ஸல்) அவர்களாகவே முந்திக் ‘பெண்ணைப் பார்த்துக் கொள்ளும்’ என்கிறார்கள். பிரிதொரு நபித்தோழர் விஷயத்திலும் இதையே வலியுறுத்தியுள்ளார்கள்.ஒரு நபித்தோழர் நபி; (ஸல்) அவர்களிடம் வந்து, ஒரு மதீனத்து பெண்ணை மணமுடிக்க நிச்சயித்திருப்பதாகக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் நீர் அப்பெண்ணை நேரில் கண்டீரா? எனக் கேட்டார்கள். அதற்கு நபித் தோழர் இல்லை என்றார். நபி (ஸல்) அவர்கள் நீர் சென்று பார்த்துக் கொள்வீராக! எனக் கூறினார்கள். அபூஹூரைரா (ரலி) முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்
திருமண வாழ்க்கை என்பது சந்தை வாழ்க்கையல்ல கூடி களைவதற்கு. அது தலைமுறைகளை உருவாக்கக் கூடிய ஒரு ஒப்பந்தமாகும். அந்த ஒப்பந்தத்தில் மனதிற்கு பிடிக்காத பெண்ணோ – ஆணோ கையொப்பமிட்டு இணையும் போது வாழ்க்கை கசந்துப் போகும். சந்தோஷமாக இருப்பதற்காகத்தான் திருமண வாழ்க்கை. அங்கு மனம் பொருந்தியவர்கள் இணைவதுதான் முறை. அதற்கு வழி வகுக்கத்தான் ‘பெண்ணைப் பார்த்துக் கொள்’ என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். எனவே திருமணத்திற்கு முன் மணமுடிக்கப போகிறவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பெண்ணின் சம்மதம்.
இறை நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப்பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்குக் கூடாது.(அல்குர்ஆன் 4:19)