Featured Posts

  • Prev
  • Next

அதிராம்பட்டினத் துறைமுகம்:முனைவர் ராஜா முஹம்மது

Posted on : 26-07-2010 | By : mohamedali | In : ஊர்

0

தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ராஜா முஹம்மது அவர்கள் அதிரை பற்றி ஆய்வு செய்தளித்த குறிப்புகள்:
(in Chronological Order)

அதிராம்பட்டினத்தில் சீன நாட்டு வணிகர்கள்: முனைவர் ராஜா முஹம்மது.
அவர்கள் தொகுப்பின் முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி…

* அதிராம்பட்டினத் துறைமுகத்திலிருந்து மரைக்காயக் கப்பல் வணிகர்கள் முத்துப்பேட்டை, நகப்பட்டினம், கீழக்கரை, தொண்டி, காரைக்கால், காயல்பட்டினம் ஆகிய துறைமுக வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.

* எலவாப்பிள்ளை மரைக்காயர் என்பவர், பல தோணிகளுக்கு உறிமையாளராக இருந்தார். இவருடைய தோணிகள் வடக்கே மசூலிப்பட்டினத்துடம் வாணிபம் செய்து வந்தன. நாகூர் வணிகர்களுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. (தமிழ்நாடு ஆவணக் காப்பகம், தஞ்சை மாவட்டப் பதிவுகள், தொகுதி 4252).

* கப்பல் வணிகர், கப்பல் உரிமையாளர் முஹம்மது தம்பி மரைக்காயர், ‘கப்பல்காரர்’ எனவும், இவர் வீடு, ‘கப்பல்கார வீடு’ எனவும் அழைக்கப்பட்டது. இவருடைய கப்பல்களான ‘முஹைதீன் சமதானி’ மற்றும் ‘சுல்தான் ஐதுருஸ்’ ஆகியன காக்கிநாடாவுக்கும் இலங்கைக்கும் சென்றுவந்தன.

* தங்க வாப்பு மரைக்காயர், முஹம்மது மொய்தீன் மரைக்காயர், ஷேக்தம்பி மரைக்காயர், ஹுசைன் மரைக்காயர் ஆகியோர் அதிராம்பட்டினம் துறைமுகத்தில் வாணிபம் செய்துவந்த கப்பல் வணிகர்களுள் குறிப்பிடத் தக்கவர்களாவர்.

* ஆங்கிலேயரின் வணிகப் பதிவேடுகள் முஸ்லிம் வணிகர்கள் இன்னும் பலரின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன.

* இவ்வூரின் மரைக்காயர் வணிகர்களின் வசிப்பிடங்கள் நகர்ப்புறம் சார்ந்த (Urban) தன்மையுடன் விளங்கியதாகவும், அவர்கள் பெரும் மாளிகை போன்ற வீடுகளில் வசித்ததாகவும் ஆங்கிலேயரின் பதிவேட்டுச் செய்திகள் அறிவிக்கின்றன.

* இவ்வூரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், மாற்றுச் சமய மக்களுடன் சமய நல்லிணக்கத்துடனும் நல்லுறவுடனும் வாழ்ந்துவந்தனர்; இன்னும் வழ்ந்துவருகின்றனர்.

* இவ்வூரின் பொருளாதார வளர்ச்சியில் தென்னந்தோப்புகள் முக்கிய இடம் வகிக்கின்றன. 1954 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலின் காரணமாக மரைக்காயர்கள் பலரின் தோப்புகள் அழிந்து, பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது என்று ஒரு செய்தி கூறுகின்றது.

* இவ்வூரின் முஸ்லிம்கள் மீன்பிடித் தொழிலிலும் ஈடுபட்டிருந்தனர்.

* சுமார் 150 ஏக்கர் பரப்பளவுக்கு இங்கு உப்பலங்கள் இருந்தன. அவை அன்றைய ஆங்கிலேயர்களின் ஏகபோக உரிமைக்குள் இருந்ததாக அரசுக் குறிப்பு கூறுகின்றது. 1930களின் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது, ஆங்கிலேயரின் உப்புவரிக் கொள்கையை எதிர்த்து இவ்வூர் முஸ்லிம்கள் பலர் போராட்டத்தில் பங்குபெற்றுள்ளனர்.

* ஏ.எம்.கே. முஹம்மது ஷேக் மரைக்காயர் அதிராம்பட்டினத்தில் கதர் நெசவு மையம் ஒன்றை 1920களில் தொடங்கி, ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் கதர்த் துணியை விற்பனை செய்தார்.

* எஸ். மொஹிதீன் வாவாத்தம்பி மரைக்காயர் 1930இல் நடைபெற்ற வேதாரணியம் உப்பு சத்தியாகிரஹத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர்.

* தியாகி எஸ்.எஸ். இபுராஹீம், அந்நியத் துணிகள் பகிஷ்கரிப்பு, உப்பு சத்தியாக்கிரஹம் ஆகிய போராட்டங்களில் கலந்துகொண்டு ஆறு மாதம் சிறை சென்றவர்.

* எம்.எம்.எஸ். ஷேக் தாவூது, எஸ்.எம். அபூபக்கர் போன்றவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றோருள் சிலராவர்.

* அதிராம்பட்டினத்தில் திருமணத்திற்குப்பின் பெண்களுக்கு வீடு கொடுக்கும் பழக்கம் உள்ளதால், இங்குள்ள வீடுகளுள் 80 விழுக்காடு வீடுகள் பெண்களின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாக இவ்வூர் ஊராட்சி மன்றப் பதிவேடுகள் மூலம் அறிய முடிகின்றது.

தொகுப்பு: அதிரை அஹ்மது

அதிராம்பட்டினம் குறித்து, இவை போன்ற இன்னும் ஏராளமான செய்திகள் கிடைக்கின்றன. எனவே, இவ்வூரின் பெயராய்வு மேலும் தொடரும்……!

http://adiraihistory.blogspot.com/2010/07/blog-post_18.html

Write a comment