Featured Posts

  • Prev
  • Next

தூயவன் கதை — 01

Posted on : 28-01-2010 | By : mohamedali | In : கதைகள் (STORIES)

Tags: , , , , , , ,

0

முன்னுரை

தூயவன் மாமாவின் கதைகளில் எனக்கு முதலில் கிடைத்த கதை இதுதான். அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாம் மாநாடு 2007-ன் சார்பாக வெளியிடப்பட்ட இஸ்லாமியச் சிறுகதைகள் என்ற நூலில் இது இருந்தது.  பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஒரு குறும்படமாக ஆக்க முடிகிற அருமையான சிறுகதை.இதை எழுதியது எந்த ஆண்டு, எதில் முதலில் வெளிவந்தது,  இது ஒரு முத்திரைக்கதையா என்றும் தெரியவில்லை.

ஆனால் இந்தக் கதையிலிருந்து எனக்கு பல செய்திகள் கிடைக்கின்றன.

1. படிக்காதவர்களுக்குத்தான் தமிழ் நன்றாக எழுத வருகிறது (இலக்கணப் பிழை மலிந்து எழுதும் தமிழ்ப்பேராசிரியர்களை எனக்குத்தெரியும்).

2. இது கதை என்பதைவிட இது ஒரு situation என்றுதான் சொல்ல வேண்டும். திரைப்படத்தில் வரும் க்ளைமாக்ஸ் மாதிரியான ஒரு முடிவு. அந்த முடிவை நோக்கி நம்மைச் செலுத்திக் கொண்டே இருக்கும் வார்த்தைகள்.

3. தாய்,  குழந்தை என்று வருகிறபோது அது ஜாதி மதங்களைக் கடந்தது என்ற உட்குறிப்பான செய்தி.

4. ஆஸ்பத்திரியில் என்னதான் சொன்னார்கள் என்பதை விளக்கமாகச் சொல்லாமல் நம்மை யூகிக்க வைக்கும் திறன். எல்லாமே ஒரு சில பக்கங்களில்.  இனி கதை

மடி நனைந்தது

baby n mumஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்ஜார்ஜாகி, ஓரடி எடுத்து வைப்பதற்குள் நெஞ்சுக்குள் பொங்கிய குமுறலை ஆபிதாவால் அடக்கி வைத்திருக்க முடியவில்லை. அன்வரின் மார்பில் முகம் புதைத்து ஒரு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழளானாள்.

அன்வருக்கு மாத்திரமென்ன இழப்பின் ஆற்றாமை இல்லையா? அவன் இதயம் ஊமைப்புலம்பலாய் அழுது கொண்டிருந்தது ஆபிதாவுக்குத் தெரியுமா? ஆயினும், அவன் ஓர் ஆண் பிள்ளையாயிற்றே! பெண்மயின் பலவீனம் அணையுடைத்துப் பாயும்போது ஆறுதல் சொல்லியாக வேண்டிய ஒரு பொறுப்பு மிக்க கணவனல்லவா?

சே, சே, என்ன ஆபிதா இது, குழந்தை மாதிரி? அதோ பார், நாலு பேர் நம்மையே பார்க்கிறார்கள். கண்ணைத் துடைத்துக் கொள்.. “ என்று அவன் வாய் ஆறுதல் சொற்களை உதிர்த்த போதிலும், அந்த அழுகையும்ம் தேம்பலும் ஒரு தாய்மை நெஞ்சிலிருந்து வெளிப்படுகிற இயல்பான குமைச்சல் என்பதையும் அவனால் உணர முடிந்தது.

இங்கே,..இங்கே வருகிறபோது எவ்வளவு சந்தோஷமாக…எத்தனை மகிழ்ச்சியோடு வந்தேன்..இப்போது எல்லாமே… எல்லாமே” நிகழ்ந்து முடிந்துவிட்ட அந்த மோசமான சம்பவத்துக்கு ஆபிதாவால் வார்த்தை வடிவம் தர முடியவில்லை.

உண்மைதான். ஏழு நாட்களுக்கு முன்பு இதே ஆஸ்பத்திரி வாயிலில் அவர்கள் வந்த குதிரை வண்டி நுழைந்தபோது ஆபிதாவின் நெஞ்சம் எத்தனை ஆனந்தப் பரவசத்தில் மூழ்கிக் கிடந்தது. எவ்வளவு எழில் கனவுகள் கண்டுகொண்டிருந்தது. எல்லாமே இப்போது நாசம்தான். நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே என்கிற புளித்துப்போன சித்தாந்தத்தை எண்ணி மனம் தேறுகிற நிலையில் அவளில்லை. ‘ஏன் நினைக்க வைத்தாய் இறைவா?’ என்று அரூபமாகி நிற்கிற அந்த ஏகனுக்கு கேள்வி எழுப்பிக்கொண்டு நின்றது அது.

அன்வரின் விழிகளைக்கூட வெண்பனி திரையிட்டது. ஆபிதாவின் பச்சை உடம்பைக் கைத்தாங்கலாகப் பற்றியபடி ஆஸ்பத்திரி கேட்டைக் கடந்துகொண்டிருந்தான் அவன். காலை நேரமாதலால் பிணி கொண்ட மனிதர்களின் ஜீவனற்ற கலகலப்பில் தோய்ந்து நின்றது அந்த ஆஸ்பத்திரியின் வெளிப்புறம். வண்டியில் சாத்துக்குடிப் பழங்களில் வியாபாரம் செய்கிற நடைபாதை வியாபாரிகளின் கூவலும் மருந்து பாட்டில்களைப் பேரம் பேசும் நோயாளிகளின் முனகலுமாய் ஓர் உயிர்ப்பற்ற சந்தடி.

ஆபிதாவால் அடிபெயர்க்கவே இயலவில்லை. ஏழு நாட்களுக்கு முன்பு வரை பூரிப்பிலும் பொலிவிலும் பொங்கி நின்ற அந்தத் தேகம், இப்போது கொத்தாக இளைத்திருந்தது. தாய்மையின் பூரணத்துவம் நிறைவாகக் குடிகொண்டு நின்ற வதனம், இப்போது மஞ்சள் பூத்து வெளிறிக் கிடந்தது. ஆர்வமும் ஆவலும் மின்னிய அந்த விழிகள் இப்போது வேதனையில் ஆழ்ந்து கிடந்தன. நெஞ்சின் வேதனையே நடையைத் தளர்த்தித் தள்ளாட வைத்திருக்கும்போது, தெம்பாக நடந்துவர எப்படி இயலும்/

ஆஸ்பத்திரியின் எதிர்வாடையில்தான் பஸ் நிலையம். எப்படியாவது ஆபிதாவை அதுவரை நடத்திச் சென்றுவிட்டால் போதும். பொறையார் போகிற பஸ் அடிக்கடி உண்டு. பகல் சாப்பாட்டுக்கெல்லாம் வீடு போய்விடலாம். அங்கே வந்து நெஞ்சின் துயரங்களை அவள் எப்படித்தான் கொட்டினாலும் நான்கு சுவர்களுக்குள் முடிந்து போகிற ஒலியலைகள்தானே? பரவாயில்லை.

சிமிண்டித் தரையில் அவளை அமர்த்தி வைத்துவிட்டு, “ஏதாவது சாப்பிடேன், ஆபிதா, இப்படி வெறும் வயிற்றோடு இருந்தால் எப்படி?” என அன்வர் பரிவை இழைத்து வினவியபோது, “வரும்போது வெறும் வயிற்றோடு வரவில்லையே. போகும்போதுதான் வெறும் கை” என்று விரக்தியாக ஆபிதா பேசியபோது, அந்த அர்த்தம் செறிந்த சொற்றொடருக்குப் பதில் கூற மொழி தெரியாமல் வாயடைத்துப் போனான் அன்வர்.