பய்யினா – தெளிவான அறிமுகம்
Posted on : 09-04-2010 | By : mohamedali | In : இஸ்லாம் (ISLAM), கட்டுரைகள் (ARTICLES)
Tags: இறைவன், கனடாவிலும் கல்லூரி, கற்றறிய வேண்டும், குர்ஆன், தொழுகை, நாகரீகம், நாத்திகம்
0
நியூயார்க் நகரில் படித்துக் கொண்டிருந்த மாணவர் அவர். ஒரு சராசரி அமெரிக்க மாணவனுக்குரிய அனைத்து குணாதிசியங்களையும் உடையவர். மதம், இறைவன், மார்க்கநெறி ஆகியனவற்றை எல்லாம் தத்துவயியல், உளயியல் சார்ந்த அவரது படிப்புகள் அவருக்கு அலட்சியத்தை ஏற்படுத்தியிருந்தன. நாத்திகத்தை எட்டிவிடும் antagonistic நிலையில் அவர் மனநிலை இருந்தது. கடவுள் இல்லவே இல்லை என்பது நாத்திகம் (atheism) என்றால், antagonism என்பதை, “கடவுள் இல்லை என்று சொல்லவில்லையே! இருந்தால் நல்லாயிருக்குமே” என்று சொல்லலாம்.
ஆனால் அவர் பாக்கிஸ்தானிய முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர். பெற்றோருடன் ரியாதில் வசித்தபோது, பெரும்பாலான முஸ்லிம் குடும்பங்கள்போல குர்ஆன் ஓதும் அளவு மட்டும் தேறியிருந்தார். ஆனால் அமெரிக்க மாணவ வாழ்க்கை அவரை நேர் எதிர்த் திசையில் பயணிக்க வைத்திருந்தது. அமெரிக்காவிற்கு வரும் முஸ்லிம்களில் குறிப்பிட்ட அளவு மக்கள், முஸ்லிம், இஸ்லாம் என்பதையெல்லாம் ஏதோ ஓர் அசுத்தமான அடையாளமாக நினைப்பது பரவலாக நடைபெறும் ஒன்று. அத்துடன் மட்டும் இல்லாமல், நானும் “உன்னைப் போல் ஒருவன்” என்று அமெரிக்கர்களின் நாகரீகம்தான் உலக உன்னதம் என்று அதில் மூழ்கித் தொலைந்து போவதுதான் கவலைகரமான உண்மை.
அமெரிக்காவில் அதிவேகமாகப் பரவும் வாழ்க்கை நெறியாக இஸ்லாம் திகழ்கிறது. இஸ்லாத்தின் வேதநூலான அல்-குர்ஆனை அதன் மூலமொழியான அரபியில் கற்றுக் கொடுக்கும் சிறந்த முயற்சியில் ‘பய்யினா’ எனும் கல்விக் கூடத்தை நிறுவி, இறைமறைத் தொண்டில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கச் சகோதரர் நுஃமான் அலீ கான் அவர்களை, சத்தியமார்க்கம்.காம் தளத்துக்காகக் கடந்த 04.04.2010 அன்று சகோதரர் நூருத்தீன் நேர்கண்டு எழுதியவை இங்கு இடம் பெறுகின்றன. -o- தனது கல்விக் கூடத்தைப் பற்றி நுஃமான் விளக்குகிறார்: |
இந்த மாணவரும் அப்படியாக மாறி, நண்பர்களுடன் பாடம், படிப்பு, உல்லாசம் என்று சுற்றிக் கொண்டிருந்தார். அப்படியிருந்த அவரை, ஒருநாள் அவர் கல்லூரியில் ஒட்டப்பட்ட சிறு நோட்டீஸ் தோளில் தட்டியது – சரியாகச் சொன்னால் கண்ணில். அது Muslim Students Association எனும் ஒரு முஸ்லிம் அமைப்பு நிகழ்த்தவிருந்த ஒரு சிறு நிகழ்ச்சிக்கான அழைப்பு.
Muslim Students Association, சுருக்கமாக MSA. அமெரிக்காவிலும் கனடாவிலும் கல்லூரி, பல்கலையில் பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு இஸ்லாமிய சேவையாற்ற 1963-இல் துவங்கப்பட்ட அமைப்பு. மிகவும் பயனுள்ள வகையிலும் வெற்றிகரமாகவும் செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர்தான் அந்த சிறு நோட்டிஸை ஒட்டினார். அவரை நெருங்கிய இந்த மாணவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். “என்னா இது?” என்று கேட்டவருக்கு, “சும்மா … நாங்க உட்கார்ந்து பேசுவோம். வந்து பார். ஜாலியாக இருக்கம்” என்று பதில் சொன்னார் அவர்.
‘இது புதுவகையான பார்ட்டியாக இருக்கும் போலிருக்கிறதே, போய்த்தான் பார்ப்போமே’ என்று ஒரு பெரிய கூட்டத்தை எதிர்பார்த்துச் சென்றார் இவர். போனால், வெகு சில மாணவர்களும் நிறைய பீட்ஸாவும் வரவேற்பு அளித்தன. என்னவோ தெரியவில்லை, அந்த MSA மாணவரை இவருக்குப் பிடித்துப் போனது. அவரிடம் கார் இருந்தது. இவருக்கு எப்பொழுதும் ரயில் பயணம்தான். எனவே அவரை இவர் உபயோகித்துக் கொண்டார். கல்லூரிக்குக் காரில் அழைத்துக் கொண்டு போக-வர. வெறும் பேச்சளவு என்பதைத் தாண்டி நட்பொன்று உருவாக ஆரம்பித்தது.
ஒருநாள் வீடு திரும்பும் வழியில் மக்ரிபு நேரம் நெருங்கிவிட அந்த MSA மாணவர் இவரிடம் மிக பவ்யமாக, “கொஞ்சம் காத்திருக்க முடியுமா? இதோ தொழுதுவிட்டு வந்துவிடுகிறேன்” என்றார். இவருக்கு மகாக் குறுகுறுப்பு ஏற்பட்டு விட்டது. ஏனெனில் இவர் தொழுது பல வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. ஒத்தாசையோ, கனிவோ, சரி; தானும் தொழலாமே என்று இணைந்து கொண்டார்.
உடனே, நியூயார்க் வானில் மின்னல் வெட்ட, பெரும் சத்தத்துடன் இடி இடிக்க, பெரும் காற்று ஒன்று வீச என்பதெல்லாம் நடக்கவில்லை. ஆனால் மனதில் என்னவோ ஒன்று மட்டும் இவருக்கு நிகழ்ந்தது. பிறகு மெதுமெதுவாய் மாற்றம் அதிகமானது. ரமளான் மாதம் நெருங்கிவிட, பள்ளியில் தராவீஹ் தொழும் அளவிற்கு மாறிப் போனவர், அத்துடன் நில்லாமல், தினமும் இரவில் தொழுகைக்குப் பிறகு மாதம் முழுவதும் நடைபெற்ற குர்ஆன் பயானில் அமரவும் செய்தார். அது குர்ஆனைப் பற்றிய இவரது பார்வையை முற்றிலுமாய் மாற்றிப் போட்டது. நோன்பு முடிந்தது. பயான் பிரசங்கம் செய்த இமாம் Dr. அப்துஸ் ஸமீயிடம் சென்றார் இவர். “என்ன வேண்டும்?” என்றவரிடம் “நான் உம்மைப் போல் ஆக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்றார் இவர் – நுஃமான் அலீ கான்.
அந்தக் கேள்வி நுஃமானின் வாழ்க்கையை 180 டிகிரி திசை மாற்றியது. காட்டுத்தனமாய், அளவற்ற வெறியில் அரபுமொழி பயில ஆரம்பித்தார் நுஃமான். இதற்கு முன் குர்ஆன் ஓதும் அளவிற்கு மட்டுமே அரபிப் பயிற்சி இருந்தது. இப்பொழுது எப்படியும் அரபு மொழி கற்றறிய வேண்டும், அதுதான் இப்போதைக்குக் கொள்கை என்று அடுத்து வேகமாகக் கழிந்தன அவரது வருடங்கள். வெளிநாடு, அரபு நாடு என்று எங்கும் செல்லாமல் அமெரிக்காவிலேயே இருந்த ஆலிம்களிடமும், அரபு வாத்தியார்களிடமும் அரபிப் பாடங்கள் பயின்றார் நுஃமான்.
இதனிடையே அந்த MSA மாணவர் நுஃமானை அமெரிக்காவில் அழைப்புப் பணியில் இயங்கிக் கொண்டிருந்த மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். நுஃமான் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது, மரியாதையாய் கவனமாய் பெயர் தவிர்க்கிறார். ஆனால் அந்த மாணவரும் அவர் குடும்பத்தாரும் நியூயார்க்கில் அழைப்புப் பணியில் பிரயாசையுடன் செயல்பட்டு வருபவர்கள் என்றும், அதனால் பிரபலமானவர்கள் என்றும் தெரிவிக்கிறார். ஆனால் அந்த மாணவர் நுஃமானிடம் இஸ்லாம் பற்றி வாயால் பேசாமலேயே அழைப்பு நிகழ்த்தியிருக்கிறார்! மேலும், அந்த மாணவர் ஹாபிஸே குர்ஆன் என்று பெருமை தெரிவிக்கிறார் நுஃமான்.





