கவிதை கேளுங்கள்! by அந்நஜாத்
Posted on : 28-07-2010 | By : mohamedali | In : இஸ்லாம் (ISLAM), கவிதைகள் (POEM)
Tags: “கவிதையிலும் ஞானம் உண்டு”
0
M.S. கமாலுத்தீன், பெங்களூர்
கவிதையை மனிதன் நீண்ட நெடுங்காலமாகவே ரசித்து வருகிறான். மொழி, எழுத்து இலக்கணம்,இவை தோன்றிய காலத்திலிருந்தே மனிதனுக்கும் கவிதைக்கும் நெருங்கிய உறவுண்டு. கவிதைகள் மனித வாழ்வின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது; கவிஞர்களும் அப்படியே.
இவ்வுலகை ஆண்ட அரசர்கள் கவிதைக்கு மயங்கி தான் ஆண்ட நாட்டின் ஒரு பகுதியை அல்லது ஒரு ஊரை கவிஞர்களுக்குத் தானமாக கொடுத்திருக்கிறார்கள். அநேக அரசர்கள் மக்களின் வரிப் பணத்தை வாரி வழங்கி தங்களை வள்ளலாகக் காட்டிக் கொண்டார்கள். அப்டி என்னதான் கவிதையில் இருக்கிறது என்றால் ஒன்றுமே இல்லை என்பது தான் பதில். கவிதை என்பது ஒரு விஷயத்தை உவமைகளுடன் வார்த்தை ஜாலங்களுடன் சொல்வதுதான்.
கவிதையை இஸ்லாம் வெறுக்கிறது; கவிஞர்களை இஸ்லாம் வழிகேடர்கள் என்ற சொல்கிறது; கவிதைக்கு இஸ்லாத்தில் இடமே இல்லை என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. கவிஞர்களைப் பற்றி அல்லாஹ் சொல்வதைப் பார்ப்போம்.
“இன்னும் கவிஞர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்களே பின்பற்றுகிறார்கள்” (அல்குர்ஆன் 26: 224) மேலும்பார்க்க 26:225, 226,36:69) யாரை அல்லாஹ் வழிகேடர்கள் என்று சொல்கிறான்? எப்படிப்பட்ட கவிதைகளை இஸ்லாம் அனுமதிக்ககிறது? மேலே உள்ளகுற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் ஹதீஸ் வெளிச்சத்தில் தெளிவுபெறுவோம்.
நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லிக்கொண்டிந்த ஆரம்பகாலத்திலும் சரி, இஸ்லாம் ஓரளவு வளர்ந்து மக்கள் அணி அணியாக இணைந்து கொண்டிருந்து போதும் சரி, குறைஷிகளின் கவிதை கலந்த குற்றசாட்டுக்கு, கவிதை மூலமே தங்கள் ஆஸ்தான கவிஞர்கள் மூலம் பதில் சொல்வார்கள்.” நபியின் கவிஞர்” என்ற பெயரும் அவர்களுக்கு இருந்தது. உதாரணமாக:
கஅப் இப்னுமாலிக்(ரழி) – போர்ப்பரணி பாடி எதிரிகளை அச்சுறுத்துவார்கள்.
ஹஸ்ஸான் இப்னுஸாபித்(ரழி) – எதிரிகளின் பாரம்பரியமான இலக்குகளைப் பழித்துப் பாடுவார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரழி) – நிராகரிப்பைச் சாடி கவிதை பாடுவார்கள்.
இதே போல் பெண்களிலும் கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்வது என்றால், ஸஃபிய்யாபின்த் அப்துல் முத்தலிப்(ரழி), கன்ஸா பின்த் அமர்(ரழி) இவர்களைச் சொல்லலாம்.
உண்மையை சொல்லக் கூடிய, மிகைப் படுத்தாத – வரம்புமீறாத கவிதைகளை இஸ்லாம் வரவேற்கவே செய்கிறது. வரம்பு மீறும் போது நபி(ஸல்) அவர்கள் திருத்தியதை இந்த ஹதீஸ் மூலம் அறியலாம்:
என் கணவருடன் உறவைத் துவக்கிய காலை நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். நீ இப்போது எனக்கு எவ்வளவு அருகில் அமர்ந்து இருக்கிறாயோ அவ்வளவு பக்கத்தில் அமர்ந்தார்கள். அப்போது எங்களின் சிறுமிகள் தஃப்கள் அடித்தனர்.பத்ருப் போரில் கொல்லப்பட்ட என் முன்னோர்களின் புகழைப் பாடலானார்கள். அப்போது ஒரு பெண்மணி “நாளை நடப்பதை அறியக்கூடிய நபி எங்களிடம் இருக்கிறார்” என்று கவிதை பாடினார்.அவரிடம் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு பாடுவதைவிட்டும் வாயை மூடு; இதற்க முன்பு பாடியதைப்பாடு எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ருபிய் பின்து மு அவ்வித் (ரழி) நூல்: திர்மிதீ (ஹதீஸ் எண் 1096) இந்த புகாரீயில் சின்ன சின்ன மாற்றங்களுடன் இடம் பெற்று உள்ளது.
எதைப்பற்றி விமர்சிப்பதாக இருந்தாலும் அதைப்பற்றி ஞானம் வேண்டும். கவிதையைப்பற்றி விமர்சிக்க கவிதை ஞானம் வேண்டும் இருந்ததா? இந்த கேள்விக்கு அவர்களே பதில் சொல்கிறார்கள்.
“கவிதையிலும் ஞானம் உண்டு” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்கள்: இப்னு அப்பாஸ் (ரழி) அப்துல்லாஹ் (ரழி) நூல்: திர்மிதீ (ஹதீஸ் எண் 3001, 3002), அபூதாவூத் இப்னுமாஜ்ஜா.
கவிதையில் ஞானமுடைய நபி(ஸல்) அவர்களே பல சந்தர்பங்களில் வசன கவிதையில் பேசியதை ஹதீஸ்களில் காணமுடிகிறது.
ஒரு தடவை நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்தபொழுது ஒரு கல் அவர்களின் மீது வந்து விழந்தது. அதன் காரணமாக அவர்களின் விரல் இரத்தமயமாகி விட்டது. அப்போது அவர்கள் ” நீ இரத்த (வெள்ள)த்தில் மாறிவிட்ட விரலேயன்றி வேறுயாதுமில்லை. அன்றி அல்லாஹ்வுடைய வழியில் இந்த வேதனை உனக்குக்கிடைத்துள்ளது” என்று (இரண்டு வரிவசன) கவிதை பாடினார்கள்.
அறிவிப்பவர் : ஜுன்துப்இப்னு அப்துல்லாஹ்(ரழ)
நூல்கள் : புகாரீ, முஸ்லிம்.
நபி(ஸல்) அவர்கள் பாத்திமாவின இல்லத்திற்கு வந்தபோது அலீ(ரழி) யைக் காணவில்லை. “உன் பெரியதந்தையின் மகன் எங்கே? என்று பாத்திமாவிடம் கேட்டார்கள். எனக்கும் அவருக்கும் சிறிய மனஸ்தாபம் இருந்தது. என்னிடம் தங்கவில்லை” என்று பாத்திமா(ரழி) கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ” அவர் எங்கே என்று பார்த்துவாரும்!” என்று ஒருவரை அனுப்பினார்கள். அவர் திரும்பி வந்து “அலீ பள்ளி வாசலில் உறங்கிக் கொண்டிருக்கிறார்” என்று பதில் சொன்னார்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தபோது அலீ(ரழி) தமது மேலாடை விலகியவராகவும் மேனியில் மண் படிந்தவராகவும் ஒரு பக்கமாகப் படுத்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரது மேனியில் படிந்திருந்த மண்ணைத் தட்டிவிட்டு ” மண்ணின் தந்தையே எழும்; மண்ணின் தந்தையே எழும்!!” என (வசன கவிதையில்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅது (ரழி),
நூல்: புகாரீ (ஹதீஸ் எண் 441)
நபி(ஸல்) அவர்களே பள்ளியில் மேடை அமைத்துக் கொடுத்து கவிதை பாடசொன்ன சம்பவம் இதோ:
“நபி(ஸல்) அவர்கள் ஹஸ்ஸானுக்காக பள்ளியில் ஒரு மேடையை அமைப்பார்கள். அதன் மேல் ஹஸ்ஸான்(ரழி) நின்று நபி(ஸல்) அவர்களைப் புகழ்வார். அல்லது அவர்கள்மேல் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு அளிப்பார்” அல்லாஹ்வின் தூதரைப் புகழும்வரை அல்லது அல்லாஹ்வின் தூதர் சார்பில் மறுப்பளிக்கும் வரை ஹஸ்ஸானுக்கு அல்லாஹ் குஹுல்குதஸ் (ஜிப்ரயீல்) மூலம் பலப்படுத்து கிறான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி),
நூல்: திர்மிதீ (ஹதீஸ் எண் 3003, 3004)
நபி(ஸல்) அவர்கள் கவிதையை அனுமதித்ததற்கு காரணம் வார்த்தையில் இருக்கும் வலிமைதான். சுடு சொற்களை எதிரிகளின் மீது வீசும்போது வார்த்தைகள் வதைக்கும். வாழ்நாள் முழுவதும், தமிழில் கூட சொல்வார்கள் : தீயினால் சுட்டபுண் ஆறிவிடும், நாவினால் சுட்டபுண் ஆறுவதில்லை என்று . நபி(ஸல்) அவர்கள் உம்ரதுல்களாவை நிறைவேற்ற மக்கா சென்ற போது அவர்களின் முன்னே கஃபுபின் மாலிக் பின் வரும் கவிதையை பாடியபடி நடந்து சென்றார். காஃபிர்களின் மைந்தர்களே! இவரை (நபியை) இவரது பாதையில் விட்டு விடுங்கள்! மண்டை ஓட்டை அதன் இடத்திலிருந்து நீக்கும் வகையில் இவரது சட்டங்களினால் இன்று உங்களை தாக்குவோம்; அத்தாக்குதல் உற்ற நண்பனையும் மறக்கச் செய்து விடும். அப்போது உமர்(ரழி) அவர்கள் மாலிக்கின் மகனே! அல்லாஹ்வின் தூதர் முன்னிலையில் அல்லாஹ்வின் ஹரம் (புனிதபூமி) எல்லையில் ்கவிதை பாடுகிறீரா? என்று கேட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் “உமரே! அவரைவிட்டு விடும்; அக்கவிதை அம்பை விட வேகமாக அவர்களைத் தாக்கும்” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்ு (ரழி),
நூல்: திர்மிதீ (ஹதீஸ் எண் 3005)
நபி(ஸல்) அவர்கள் பல சந்தர்பங்களில் கவிதைகளை மேற்கோள்காட்டி உள்ளார்கள். உதாரனத்துக்கு இரண்டு ஹதீஸ்களைப் பார்ப்போம்.
நபி(ஸல்) அவர்கள் கவிதைகளை மேற்கோள் காட்டுவார்கள்? என்று ஆயிஷா(ரழி)யிடம் கேட்டேன். அதற்கவர்கள் அப்துல்லாஹ் பின் ரவாஹாவின் கவிதையை மேற்கோள் காட்டுவார்கள்.” நீ யாருக்கு உணவளிக்கவில்லையோ அவன் உன்னிடம் செய்திகளைக் கொண்டு வருவான்” என்ற கவிதையை கூறுவார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி),
நூல்: திரிமிதீ (ஹதீஸ் எண் 3006)
“அல்லாஹ்வைத் தவிர அனைத்தும் அழிந்துவிடும்” என்ற லபீத் எனும் கவிஞரின் கூற்றே அரபியரின் பேச்சுக்களில் சிறந்ததாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி),
நூல்: புகாரீ, முஸ்லிம், திரிமிதீ (ஹதீஸ் எண் 3007)





